அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி மனைவி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை நடந்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், கைது நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தன்னுடைய அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அடிப்படையில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் என் கணவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் என 2022ம் ஆண்டு முதல் அண்ணாமலை பேசி வருகிறார்.
என் கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்.
கைது செய்யப்பட்ட என் கணவரை, நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட் முறையாக விசாரிக்கவில்லை.
மாறாக நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டது, இது சட்டவிரோதமானது என அறிவித்து என் கணவரை விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 13ம் தேதி இரவு 11 மணியளவில் அமலாக்கத்துறையின் சோதனை நிறைவடைந்ததாக கூறப்பட்டது, ஆனால் நள்ளிரவு 1.39 மணியளவில் என் கணவரை கைது செய்தனர், இடைப்பட்ட 3 மணிநேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
ஜூன் 27 ஆம் தேதி (நாளை) மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரும்போது, கூடுதல் மனுவும் விசாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |