இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே கத்திக்குத்து: சிறுவனை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி
Serbian Police shoot a minor Outside Israeli Embassy: பெல்கிரேடில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்
செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியை சிறுவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து நடத்திய சிறுவனை சம்பவ இடத்திலேயே செர்பிய காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
புதன்கிழமை நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தில், கருப்பு நிற உடையணிந்த அடையாளம் தெரியாத நபர், இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த காவல் சாவடியை நோக்கி விரைந்துள்ளார்.

அங்கிருந்த கதவை திறந்து உள்ளே நுழைந்த அந்த சிறுவன் சிறப்புப்படை காவல் அதிகாரியை நோக்கி பாய்ந்துள்ளார்.
மேலும் தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு அந்த அதிகாரியின் கன்னத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தற்காப்புக்காக அந்த காவல் அதிகாரி தன்னிடம் இருந்த சேவை துப்பாக்கியால் தாக்குதல்தாரியை சுட்டு வீழ்த்தினார்.
இதனால் தாக்குதல்தாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காவல் அதிகாரி தற்காப்பிற்காகவே துப்பாக்கி சூடு நடத்தியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது தாக்குதல்தாரி அல்லாஹு அக்பர்(இறைவன் பெரியவன்) என்று முழக்கமிட்டதாகவும், இதனை பயங்கரவாத செயலாக கருதி விசாரணை நடத்தி வருவதாகவும் செர்பிய நாட்டின் உள்துறை அமைச்சர் இவிகா டாசிச் உறுதிப்படுத்தியுள்ளார்.