17 பெண்கள் கொலை! சிக்கிய சீரியல் கில்லர்.. திடுக்கிடும் தகவல்கள்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 17 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த எருக்கலி ஸ்ரீனு என்ற நபர், கடந்த 2009ஆம் ஆண்டு தனது சகோதரரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 2013ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாக அவரது தண்டனை காலம் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீனு விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் குச்சனுரை சேர்ந்த அலிவேலம்மா என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீனு மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஸ்ரீனுவை பிடித்து விசாரித்த போது பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அலிவேலம்மாவை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், அவரை போல மேலும் 16 பெண்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
தனது கள்ளு கடைக்கு மது அருந்த வரும் பெண்களுடன், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீனு நட்பாக பழகி, சுற்றுலா என்ற பெயரில் தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர்கள் அணிந்திருந்த தங்கம், வெள்ளி நகைகளை பறித்து தனது மனைவியிடம் கொடுத்துள்ளார். இவ்வாறாக அவர் மொத்தம் 17 பெண்களை கொலை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் ஸ்ரீனுவின் மனைவி சாலம்மா திருட்டு நகைகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பெண்களை கொலை செய்த வழக்கு தொடர்பில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.