ஷென்சென் பயணிகளுக்கு விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்திய சீனா... சலுகைகள் அறிவிப்பு
ஹொங்ஹொங்கிற்கு வருகை தரும் ஷென்சென் மக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதுடன், ஆண்டுக்கு பல முறை நுழையவும் அனுமதிக்க உள்ளது.
பல நுழைவுக் கொள்கை
குறித்த சலுகைகள் டிசம்பர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ஒவ்வொரு முறையும் ஷென்சென் பயணிகள் 7 நாட்கள் வரையில் ஹொங்ஹொங்கில் தங்க முடியும்.
இந்த பலமுறை பயன்படுத்தப்படும் விசாவானது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் தற்போதைய இந்த அறிவிப்பானது 2009ல் முன்னெடுக்கப்பட்ட பல நுழைவுக் கொள்கையை மீண்டும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் 2015ல் மீண்டும் சீனா கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பின்னர் ஷென்சென் குடியிருப்பாளர்களை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஹொங்ஹொங் செல்ல சீனா அனுமதிக்கத் தொடங்கியது.
ஷென்சென் வர்த்தகர்கள் ஹொங்ஹொங்கில் பலமுறை பயணம் செய்து, மலிவான விலைக்கு பொருட்களை வாங்கி, சீனாவின் பிற பகுதிகளில் அதிக கட்டணத்திற்கு விற்பனை செய்வது ஹொங்ஹொங் மக்களிடையே கோபத்தைத் தூண்டியது.
ஏழு நாட்களுக்கு மேல்
இதன் காரணமாகவே கொள்கைகள் கடுமையாக்கப்பட்டன. தற்போது சீனாவின் இந்த முடிவு சில்லறை விற்பனை மற்றும் உணவு விடுதிகள் போன்ற சுற்றுலா தொடர்பான பல தொழில்களுக்கு பயனளிக்கும் என ஹொங்ஹொங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் மற்றொரு நகரமான ஜுஹாய் நகரில் வசிப்பவர்களுக்கான விசா விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. வாரத்திற்கு ஒருமுறை மக்காவோ பகுதிக்கு நுழையும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு நாட்களுக்கு மேல் தங்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. ஜுஹாய் குடியிருப்பாளர்கள் முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மக்காவோவிற்கு நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |