பல்கேரியா அருகே கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்... கப்பல் மூழ்கியதால் பணியாளர்கள் மாயம்
Crew goes missing after ship sinks in Black Sea Zone: கருங்கடல் பகுதியில் கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, ஊழியர்கள் காணாமல் போயினர்.
பல்கேரியாவின் கருங்கடல் பகுதியில் ட்ரோன் தாக்குதலால் மூழ்கிய கப்பலின் ஊழியர்களைக் காணவில்லை என பல்கேரிய பிரதமர் ரூமென் ரதேவ் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ள முடியாதது
செய்தியாளர்களிடம் பேசிய ரதேவ், இரண்டு வணிகக் கப்பல்கள் மீதான ட்ரோன் தாக்குதலைக் கண்டித்ததுடன், அதனை கடல்சார் சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்றும் குறிப்பிட்டார்.

பல்கேரியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கேரியக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கருங்கடலில் ட்ரோன்கள் இரண்டு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றில் ஒன்றை மூழ்கடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பிரதமரின் கருத்து வெளியாகின.
செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டிய பிறகு, பல ட்ரோன்கள் மூலம் பல்கேரியக் கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் அந்தக்கப்பல்கள் தாக்கப்பட்டதாக ரதேவ் தெரிவித்தார்.
இதனிடையே, ட்ரோன் தாக்குதலில் மூழ்கிய கப்பலில் இருந்த ஊழியர்கள் காணாமல் போயினர் என்றும், அதேவேளையில், இரண்டாவது கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலோர நகரமான பியாலாவிற்கு (Byala) கிழக்கே சுமார் 90 மைல் தொலைவில், காணாமல் போன ஊழியர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
தாக்குதல்களைத் தொடர்ந்து, மற்றொரு கப்பலில் இருந்த குறைந்தது 18 பணியாளர்கள் பல்கேரியப் படகு ஒன்றின் மூலம் வெளியேற்றப்பட்டனர். டோகோ நாட்டு கொடியுடன் இயங்கிய 'ஆல்ஃபா வதன்' (Alfa Watan) என்ற கப்பல் தாக்குதலில் கடுமையான சேதமடைந்து அந்த இடத்திலேயே மூழ்கியதாகவும், அதன் பணியாளர்களின் நிலை குறித்த தகவல் தெளிவாக இல்லை என்றும் ராதேவ் தெரிவித்தார்.
ரஷ்ய ட்ரோன்
தாக்குதல்களுக்குப் பிறகு இரு கப்பல்களும் ஆபத்து எச்சரிக்கைகளை அனுப்பிய நிலையில், ட்ரோன்கள் கப்பல்களைத் தாக்கியதாக பல்கேரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ருமேனியாவின் கடல் எல்லைக்கு வெளியே, கருங்கடலில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்ததாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்த மறுநாளே இந்தச் சமீபத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அந்தச் சம்பவத்திற்கு ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களே காரணம் என்று குறிப்பிட்டார். இந்தக்குற்றச்சாட்டு குறித்து ரஷ்யா உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல், கருங்கடல் பகுதி அதிகரித்தப் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் வான்வெளிக்குள் நுழைந்த சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன. அதேவேளையில், கருங்கடலில் கடல் கண்ணிவெடிகளும் கண்டறியப்பட்டு, முக்கிய வர்த்தக மற்றும் எரிசக்தி வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.