சொத்தில் பங்கு தராமல் பிரபு, ராம்குமார் ஏமாற்றினர்! சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
சிவாஜி கணேசனின் சொத்துக்களில் உரிமை வழங்க கோரி அவரின் மகள்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18ம் திகதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் சொத்துக்களில் பங்கு தராமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ஆம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஜூலை 18 ஆம் திகதி நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.