விளையாடும் பள்ளி மாணவர்களை... சமூக ஊடக ஒற்றைப் பதிவால் சிக்கிய இராணுவ வீரர்
பள்ளி மாணவர்களை பெற்றோர் கண்முன்னே சுட்டுக்கொல்ல வேண்டும் என சமூக ஊடகத்தில் பதிவிட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் தனியார் யூத பள்ளி ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ள முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரே, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக கைதாகியுள்ளார்.
23 வயதான Thomas Develin என்பவர் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் பள்ளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்முன்னே சுட்டுக்கொல்ல வேண்டும் என தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அதிகாரிகளில் தமக்கு அறிமுகமானவர்களிடமே Thomas Develin மாணவர்கள் தொடர்பில் அந்த அச்சுறுத்தும் கருத்தை பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி, துப்பாக்கி ஒன்றை ஏந்தியவாறு, யூத பள்ளி ஒன்றில் பணியாற்றுகிறேன், இந்த துப்பாக்கியை அனைவரின் பிரச்சனையாக மாற்றப்போகிறேன் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 11 ம் திகதி வெளியிட்ட குறித்த புகைப்படத்திற்கு பின்னர் இன்னொரு பதிவிட்ட Thomas Develin, மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லவரும் பெற்றோர்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து Thomas Develin புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 8ம் திகதி இவர் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே கருப்பின மக்கள், பெண்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராகவும் Thomas Develin அச்சுறுத்தலான கருத்துகளை வெளியிட்டதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.