கண்டதும் சுட உத்தரவு... நாட்டு மக்களுக்கு எதிராக கோர முகம் காட்டும் ஜனாதிபதி
கஜகஸ்தான் அரசுக்கு எதிராக ஞாயிறன்று தொடங்கிய மக்கள் போராட்டம் நீடிக்கும் நிலையில், கண்டதும் சுட ராணுவத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளார் நாட்டின் ஜனாதிபதி.
வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் வாயிலாக உரையாற்றிய ஜனாதிபதி Kassym-Jomart Tokayev, போராட்டக்காரர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபார்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ள Kassym-Jomart Tokayev, கலவரங்களை ஒடுக்க துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
ஞாயிறன்று தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இதுவரை பொலிசார் மற்றும் மக்கள் என ஒரு டசினுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற முப்பது ஆண்டுகளில் நாடு சந்தித்திராத நெருக்கடியை கஜகஸ்தான் தற்போது எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் உள்விவகாரத்துறை வெளியிட்ட தகவலில், கலவரத்தில் ஈடுபட்ட ஆயுததாரிகளான 26 குற்றவாளிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 3,000 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கலவரத்தை ஒடுக்க போராடிய தேசியப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளில் 18 பேர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம், படிப்படியாக அரசுக்கு எதிரான கலவரமாக மாறியது. இதனிடையே, கஜகஸ்தான் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா ராணுவத்தின் ஒரு பிரிவை அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே கஜகஸ்தான் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி சுமூகமான முடிவுக்கு வர கஜகஸ்தான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவே பொதுமக்கள் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் அரசாங்கம் அளிக்கும் உத்தரவாதம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் அமைதி திரும்ப எந்த கட்டத்திலும் உதவ ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. ஆனால் நாட்டு மக்கள் மீது கஜகஸ்தான் அரசாங்கத்தின் கடும்போக்கு நடவடிக்கையை சீனா வரவேற்றுள்ளதுடன்,
இது பொறுப்புணர்ந்த செயல் எனவும் இதுவரையான நடவடிக்கைகள் ஒரு அரசியல்வாதியாக உங்கள் பொறுப்பு மற்றும் கடமை உணர்வைக் காட்டுகிறது எனவும் சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் பாராட்டும் தெரிவித்துள்ளார்.