கடற்கரையில் புகுந்து சரமாரியாக சுட்ட கும்பல்: பதறியடித்து வெளியேறிய சுற்றுலாபயணிகள்
மெக்சிகோவின் கான்குன் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள கடற்கரையில் கும்பல் ஒன்று திடீரென்று துப்பாக்கிச்சூடு நடந்திய நிலையில், இரண்டு போதைப்பொருள் வியாபாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை மாநில நிர்வாகம் உறுதி செய்துள்ளதுடன், போதை மருந்து கும்பல்கள் முன்னெடுத்த தாக்குதல் அது எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே கான்குன் ரிசார்ட்டில் அமைந்துள்ள Hyatt Ziva Riviera ஹொட்டல் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக ஹொட்டலுக்குள் செல்லும்படி கோரியுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு தொடர்பிலும் எச்சரித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அரசாங்கம் இராணுவத்தை நிலைநிறுத்தியதில் இருந்து மெக்சிகோவில் போதை மருந்து கும்பல் தொடர்பான கொலைகளில் 300,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் துலும் பகுதியில் போதைமருந்து கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததை அடுத்து மெக்சிகோ பாதுகாப்புப் படையினர் துலுமுக்கு அனுப்பப்பட்டனர்.