பிரான்சில் பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கடத்த முயன்ற நபர்களால் பரபரப்பு: அதிர்ச்சிப் பின்னணி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கிரிப்டோ கடத்தல்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒரு தம்பதியர் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், முகமூடி அணிந்த மூன்று பேர் திடீரென அந்தப் பெண்ணைத் தூக்கிச் செல்ல முயன்றனர்.
அவர் முரண்டுபிடிக்க, அவரது கணவர் தன் மனைவியை விடாமல் பிடித்துக்கொண்டு உதவி கோரி கூக்குரலிட, அந்த இடமே களேபரமாகியுள்ளது.
அப்போது அருகிலிருந்த கடை ஒன்றின் உரிமையாளரான Nabil என்பவர், தீயணைக்கும் கருவி ஒன்றை எடுத்துவந்து முகமூடி அணிந்த நபர்களைத் துரத்த, மக்கள் கூட்டம் அதிகரிக்க, அந்த முகமூடி நபர்கள் தங்கள் வேனில் ஏறி தப்பியோடியுள்ளனர்.
செவ்வாயன்று, இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வெளியாக, பிரான்ஸ் அதிர்ந்தது.
விடயம் என்னவென்றால், அந்தப் பெண் ஒரு பிரபல கிரிப்டோ நிறுவனரின் மகள் ஆவார்.
அதாவது, கிரிப்டோ நிறுவனம் வைத்துள்ளவர்களின் உறவினர்களைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் ஒரு கும்பல் பிரான்சில் கைவரிசை காட்டி வருகிறது.
சமீபத்தில், Eric Larchevêque என்னும் கிரிப்டோ நிறுவனர் ஒருவரின் பார்ட்னரை சிலர் கடத்திச் சென்றனர். பொலிசார் அவரை மீட்டாலும், அவரது விரல்களை அந்த கூட்டம் ஏற்கனவே வெட்டியிருந்தது.
இதுபோல் கிரிப்டோ நிறுவன உரிமையாளர்களின் உறவினர்கள் கடத்தப்பட்ட, கடத்த முயன்ற சம்பவம் பிரான்சில் நடப்பது, இந்த ஆண்டில் இது மூன்றாவது முறையாகும்.
அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ள இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் உள்துறை அமைச்சரான புரூனோ (Bruno Retailleau), கிரிப்டோ துறை தொழிலதிபர்களை இன்று சந்தித்து இத்தகைய கடத்தல்களை தடுப்பது மற்றும் அபாயம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |