SI தேர்வில் பிட் அடித்த எஸ்.ஐ யின் மனைவி..உடந்தையாக இருந்த எஸ்.ஐ யும் கைது!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போலீஸ் எஸ்.ஐ.,க்கான தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு தனியார் மகளிர் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வு மையத்தில் லாவண்யா என்ற பெண் தேர்வு எழுதினார். அப்பொழுது லாவண்யா கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
அவருடன் இரண்டு பெண் காவலர்களையும் உடன் அனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து தேர்வு அறைக்குள் திரும்ப வந்து அந்த பெண் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் காப்பியடித்து எழுதியதை தேர்வு மைய அலுவலர் கண்டுபிடித்தார்.
அவர் கையில் வைத்திருந்த பேப்பர்களில் அவர் எழுதவுள்ள கேள்விகளுக்கு உரிய சரியான விடை இருந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து கண்காணிப்பு பணியாளர் அந்த பெண்ணை தேர்வு எழுத அனுமதிக்காமல் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தேர்வாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த தேர்வரின் கணவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதற்கு முன்பு போலீஸ் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் என்பதும், தற்போது அவர் சென்னையில் பணியாற்றி வருவதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் பணிபுரியும் தனது கணவருக்கு வேண்டப்பட்டவர்கள் மூலமாக கழிவறையில் வைத்து, பிட்டு பேப்பர்களை பெற்று அதன் மூலம் அந்தப் பெண் சரியான விடைகளை எழுதியதாக கூறப்படுகிறது.
விசாரணையில், தேர்வு மையத்திற்கு லாவண்யா செல்போன் கொண்டு சென்றதும் அதை பயன்படுத்தி வினாத்தாளை போட்டோ எடுத்து வெளியே அனுப்பி அதன் மூலம் விடைகளை பெற்று பூர்த்தி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.இதற்கு எஸ்.ஐ.,யான அவரது கணவர் சுமன் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, லாவண்யா, எஸ்ஐ சுமன் ஆகிய 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை எஸ்ஐ சிவக்குமார் மற்றும் செங்கத்தைச் சேர்ந்த டாக்டர் பிரவீன்குமார் ஆகியோரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு, அதற்கான விடைகளை கூகுளில் தேடி சரியான பதில்களை கண்டுபிடித்து அதை லாவண்யாவுக்கு சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக எஸ்ஐ சிவகுமார் மற்றும் செங்கத்தை சேர்ந்த டாக்டர் பிரவீன் குமார் ஆகியோரையும் நேற்றிரவு எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |