பிஞ்சு சகோதரர்களின் மரணம்: இளைஞருக்கு 100 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் பிஞ்சு சகோதரர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இண்டியானா மாகாணத்தில் கடந்த 2017ம் ஆண்டிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது வெறும் 13 வயதேயான Nickalas Kedrowitz தமது பிஞ்சு சகோதரர்கள் இருவரை மூச்சைத்திணறடித்து கொலை செய்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின் போது, சிகிச்சை மேற்கொள்ளப்படாத உளவியல் பிரச்சனை இருந்து வந்தது என Nickalas Kedrowitz-ன் சட்டத்தரணி வாதிட்டும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
கடந்த 2017 ஜூலை மற்றும் மே மாதங்களில் 11 மாத குழந்தை நதானியேல் ரிட்ஸ் மற்றும் 2 வயதான டிசைரி மெக்கார்ட்னி ஆகியோரைக் கொலை செய்ததற்காக 2018 ஆகஸ்ட் மாதம் கெட்ரோவிட்ஸ் கைது செய்யப்பட்டார்.
ஆனால், தமது சகோதரர்களை துன்பத்தின் குழியில் இருந்து மீட்கவே அவ்வாறு செய்ததாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். விசாரணையின் ஒருபகுதியாக கெட்ரோவிட்டின் உறவினர் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கையில்,
முதல் சம்பவத்திற்கு முந்தைய நாள் தமது தந்தையால் கெட்ரோவிட்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதில் சிறுவன் கெட்ரோவிட்சின் மூக்குடைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பூனை ஒன்று லேசாக காயப்படுத்தியதால், கெட்ரோவிட்ஸ் அந்த பூனையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியானா மாகாண நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கெட்ரோவிட்ஸ் கடவுளிடம் நேரிடையாக கலந்து பேசிய பின்னரே தமது சகோதரர்களின் உயிரைப்பறித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளியான Nickalas Kedrowitz-கு தொடர்ந்து இரண்டு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.