மாடெர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பக்க விளைவு: மருத்துவர்கள் ஆலோசனை
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் மாடெர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு, ஒரு வித பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.
Amelia Brown என்ற பெண்ணுக்கு மாடெர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் லேசாக மயக்கம்போல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சில நாட்களுக்குப் பின் தடுப்பூசி போட்ட இடத்தில் ஊறல் ஏற்பட்டுள்ளது.
அந்த இடம் சிவந்து சற்று வீங்கியும் உள்ளது. ஆகவே, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து அவர் கவலைப்படத் தொடங்கிவிட்டார்.
அவரைப் போலவே வேறு சிலருக்கும் இதே போன்ற பக்கவிளைவுகள் ஏற்படவே மக்களுக்கு சற்று பயம் ஏற்பட்டுள்ளது.
அதை ‘கொரோனா கை’ என்றே சிலர் அழைக்கத்தொடங்கிவிட்டார்கள். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 முதல் 9 சதவிகிதத்தினருக்கு இதுபோல் ஏற்படலாம் என்று கூறியுள்ள அப்பகுதியைச் சேர்ந்த Dr Praveen Buddiga என்னும் நோய் எதிர்ப்பியல் நிபுணர், தடுப்பூசி போட்டு 7 முதல் 10 நாட்களுக்குள் இப்படி ஆகலாம் என்கிறார்.
அது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று கூறியுள்ள அவர், 48 மணி நேரத்திற்குள் அது சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
இப்படி கையில் மாற்றம் ஏற்பட்டால், அதன் மீது ஐஸ் கட்டி ஒன்றை வைப்பதுடன், நிறைய தண்ணீர் குடிக்குமாறும், கைகளை நீட்டி மடக்குமாறும் ஆலோசனை கூறுகிறார் அவர். அப்படி செய்தால், 24 மணி நேரத்துக்குள் கை சரியாகிவிடும் என்கிறார் அவர்.


