பிரித்தானியாவில் திடீரென உயிரிழந்த சீக்கியர்: சதியா? குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகம்...
பிரித்தானியாவில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் ஆதரவாளரான சீக்கியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், கனடாவில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டது, அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கொலை முயற்சி நடந்தது ஆகிய விடயங்கள் போல, பிரித்தானியாவில் இந்த சீக்கியர் உயிரிழந்ததன் பின்னணியிலும் ஏதேனும் சதி இருக்குமா என அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் உருவாகியுள்ளது.
திடீரென உயிரிழந்த புகலிடக்கோரிக்கையாளர்
பர்மிங்காமில் வாழ்ந்துவந்த புகலிடக்கோரிக்கையாளரான அவ்தார் சிங் (Avtar Singh Khanda, 35), சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் ஆவார்.
ஜூன் மாதம் 15ஆம் திகதி, அவ்தார் சிங் பர்மிங்காம் மருத்துவமனை ஒன்றில் திடீரென உயிரிழந்தார். Acute myeloid leukemia என்னும் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Photograph: handout
குடும்பத்தினருக்கு எழுந்துள்ள சந்தேகம்
அவ்தார் சிங் இறந்த அதே நேரத்தில்தான், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்னும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் கொல்லப்பட்டார், அதன்பின் அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்னும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியரைக் கொல்ல சதி நடந்தது தெரியவந்தது.
அதனால் அவ்தார் சிங் கொலையிலும் ஏதேனும் சதி இருக்குமா என அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, அவ்தார் சிங் மரணம் தொடர்பில் புதிதாக பொலிஸ் விசாரணை நடத்தவேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |