சிறுமி ஹாசினியை சீரழித்து கொன்ற தஷ்வந்தை நினைவிருக்கா? அதே பாணியில் மீண்டும் நடந்த கொடூரம்... திடுக்கிடும் பல ஒற்றுமைகள்
கேரளாவில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 2017ல் சிறுமி ஹாசினியின் கொலையை அப்படியே மீண்டும் நினைவுப்படுத்துவது போலவே அமைந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி அருகே உள்ளது வண்டிப்பெரியாா். இங்கு தேயிலை தோட்ட தொழிலாளா்கள் குடியிருப்பு உள்ளது.
கடந்த ஜூன் 30 ல் ஒரு வீட்டில் 6 வயது சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கி இறந்து கிடந்தாா். சிறுமியின் உடற்கூறு பரிசோதனையில் அவர் பலமுறை கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது, இதுபற்றி மருத்துவா்கள் அறிக்கையாக வண்டிப்பெரியாா் பொலிசில் ஒப்படைத்தனா்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் சிறுமியின் பக்கத்து வீட்டை சோ்ந்த அர்ஜுன் (22) என்ற இளைஞரை கைது செய்தனா்.
விசாரணையில் சிறுமியின் பெற்றோா் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் என்பதால் வேலைக்கு சென்ற நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், சம்பவ நாளன்று சிறுமியை சீரழித்த போது, அவா் மயக்கமடைந்ததால் இறந்து விட்டாா் என்று கருதி கழுத்தில் கயிறை கட்டி ஊஞ்சல் ஆடுவது போல் ஏற்பாடு செய்து தொங்கவிட்டது தெரியவந்தது.

மேலும் சிறுமி இறப்பு நிகழ்விலும் அர்ஜுன் கலந்து கொண்டு சிறுமி பிரிவை தாங்க முடியாதவன் போல நடித்து கதறி அழுதிருக்கிறான், இதோடு இறப்பு வீட்டுக்கு வந்தவர்கள் உணவு சாப்பிட உதவியும் செய்துள்ளான் என தெரியவந்தது.
இதையடுத்து அர்ஜுனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2017ல் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ஹாசினி கொலை வழக்கோடு அப்படியே ஒத்து போகிறது.
ஏனெனில் 6 வயதான சிறுமி ஹாசினி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தஷ்வந்த் (23) என்ற இளைஞன் வசித்து வந்தான்.
ஹாசினி பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரை தூக்கி கொண்டு தனது வீட்டுக்கு வந்த தஷ்வந்த் சிறுமியை பலமுறை சீரழித்து பின்னர் கொலை செய்திருக்கிறான். இதன்பின்னர் சடலத்தை பையில் போட்டு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறான்.
இதையடுத்து அர்ஜுன் தற்போது செய்தது போலவே அப்போது தஷ்வந்த் ஒரு நாடகத்தை நடத்தினான். அதாவது ஹாசினி வீட்டில் இருந்து காணாமல் போனதால் குடும்பத்தார் அவளை தேடினர்.
அப்போது அவர்களுடன் சேர்ந்து தானும் ஹாசினியை தேடுவது போல நடித்திருக்கிறான் தஷ்வந்த். இதன்பின்னர் குட்டு வெளியாகி தஷ்வந்தை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியில் வந்த அவன் பெற்ற தாயை கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானான். இதையடுத்து மும்பையில் வைத்து அவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதை தொடர்ந்து தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.