மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதித்த சிங்கப்பூர்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய தமிழருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மலேசிய தமிழரான 41 வயது கிஷோர்குமார் ராகவன், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்துச் சென்று, சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இது குறித்த தகவல் சிங்கப்பூர் பொலிஸாருக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த அந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அந்த பையை சோதனை செய்தல், அதில் 36.5 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
சிங்கப்பூர் சட்டப்படி, ஒருவர் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.
இதையடுத்து, சிங்கப்பூர் பொலிஸார் புங் ஆகியாங் மற்றும் போதை பொருளை எடுத்து வந்த தமிழரான கிஷோர்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கிஷோர்குமார் ராகவன் தரப்பில் ஆஜரான வக்கீல், தனது கட்சிகாரருக்கு அவர் எடுத்து சென்றது ஹெராயின் என்பது தெரியாது என வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, கிஷோர்குமார் ராகவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் மற்றொரு குற்றவாளியான புங் ஆகியாங் பொலிஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், அவருக்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கியும் தீர்ப்பு அளித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.