கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதும்: ஐசிஎம்ஆர் ஆய்வு
கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்கள் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (I.C.M.R) மேற்கொண்ட புதிய ஆய்வில், முன்னெச்சரிக்கையாக இரண்டு கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்ட நபர்களைக் காட்டிலும், கோவிட் -19லிருந்து மீண்டு தடுப்பூசி பெற்றவர்கள், டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக அதிக பாதுகாப்பைக் கொண்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்தியாவில் COVID-19 பாதிப்பின் எழுச்சிக்கும், 2-வது அலைக்கும் காரணமாக இருந்த, B.1.617.1 (Kappa variant) வகை கொரோனா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டின் நடுநிலைப்படுத்தும் திறனைப் புரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும், தற்போதைய நிலைமையில் இந்தியாவில் பெரும்பாலானோர் சீரம் நிறுவனம் (SII) தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றுள்ளதால் இந்த ஆய்வு முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
குறிப்பாக, கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் SARS-CoV-2 வகை தொற்று ஏற்படாமல் இருக்கவும், இனி புதிதாக உருமாறும் வைரஸ்களுக்கு எதிரான பாதுக்காப்பை வழங்கவும், அவர்கள் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி போட்டாலே மிகவும் போதுமானது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.