ஒலிம்பிக்ஸ் தொடருக்கு இன்னும் ஒருவாரம்... நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடைபெற உள்ளது. மட்டுமின்றி போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வீரர்கள் கிராமத்தில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுதான் என்று டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மாசா தகாயா தெரிவித்தார்.
இருப்பினும், தாகாயா அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை. டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை அமுலில் இருப்பதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.