பிரபல ஐரோப்பிய நாட்டில் அடுத்தடுத்து பனிச்சரிவு! 7 பேர் பலி
ஐரோப்பிய நாடானா ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதல் சம்பவத்தில், சுவிட்சர்லாந்தின் எல்லையில் உள்ள ஸ்பிஸ் நகருக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டதில் 42 வயதான ஆஸ்திரிய மலை மற்றும் பனிச்சறுக்கு வழிகாட்டி மற்றும் நான்கு ஸ்வீடிஷ் பனிச்சறுக்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதில், உயிர்தப்பிய 43 வயதான ஸ்வீடிஷ் பனிச்சறுக்கு வீரர் உதவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதை தொடர்ந்து, அவர் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சில மணிநேரங்களில் மேற்கு ஆஸ்திரியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக பொலிசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கச் சென்ற இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததை தொடர்ந்து, உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை குழுவினர், 61 வயதுடைய ஒரு பெண் மற்றும் 60 வயது ஆண் என இரண்டு ஆஸ்திரிய பனிச்சறுக்கு வீரர்களின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஆல்ப்ஸ் மலையில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு வெப்பமான வானிலை நிலவுவதே பனிச்சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.