ஜெலென்ஸ்கியை மிரட்டிய ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்... பதவி பறிபோக வாய்ப்பு
ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்த இருப்பதாக கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமாளிக்கத் தவறிவிட்டு
பிரதமர் ராபர்ட் ஃபிகோ, உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளைச் சமாளிக்கத் தவறிவிட்டு, வெளிவிவகாரக் கொள்கையை ரஷ்யாவிற்கு ஆதரவாக கொண்டுசெல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஃபிகோவின் ஆளும் இடதுசாரி-தேசியவாத கூட்டணி சமீபத்திய மாதங்களில் ஆட்டம் கண்டுள்ளது, அதன் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் 150 இடங்களில் 76 என சுருங்கி விட்டது.
மட்டுமின்றி, பிரதமர் ஃபிகோ, கட்சியின் சில இளைய தலைமுறை உறுப்பினர்களிடமிருந்து கருத்து வேறுபாடுகளையும், அவரது கூட்டணிகளிகளிடையே மோதல் போக்கையும் எதிர்கொள்கிறார்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. எதிர்க்கட்சி வெற்றி பெற பெரும்பான்மை தேவைப்படும், இதன் விளைவாக ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி ஒரு புதிய அரசாங்கத்தை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மட்டுமின்றி, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் ஒப்புக் கொள்ள வேண்டும், இருப்பினும் அத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க முகாம்கள் இரண்டின் ஆதரவும் தேவைப்படும்.
ஃபிகோ அரசாங்கமானது அதிக நிதிநிலை பற்றாக்குறை, சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. மிக முக்கியமாக உக்ரைன் ஊடாக ரஷ்ய எரிவாயு விநியோகம் முடக்கப்பட்டதும் ஃபிகோ அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிகோ மிரட்டல்
நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் நடவடிக்கையை உக்ரைன் முன்னெடுத்ததாகவும் ஃபிகோ குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துடன், உக்ரைன் அகதிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாகவும், ரஷ்ய எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜெலென்ஸ்கி பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஃபிகோ கொந்தளித்திருந்தார்.
உக்ரைனில் இருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதால் ஸ்லோவாக்கியாவிற்கு 1.5 பில்லியன் யூரோக்கள் அதிகமாக செலவிட வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்று ஃபிகோ தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, தங்கள் நாட்டுக்கு சேர வேண்டிய ஒப்பந்த கட்டணத்தையும் இழக்க வேண்டியுள்ளது என்றார். இதன் காரணமாக உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகளை ரத்து செய்ய இருப்பதாகவும் ஃபிகோ மிரட்டல் விடுத்தார்.
எரிவாயு விநியோகம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினை நேரிடையாக சந்தித்து கோரிக்கை வைத்த விவகாரம் சொந்த நாட்டில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. தற்போது ஃபிகோவின் ரஷ்ய ஆதரவு நிலையே, அவரது பதவியை பறிக்கும் நெருக்கடிக்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |