ரஷ்யாவுக்கு எதிராக ஜெலென்ஸ்கியின் முடிவு... உக்ரைன் மக்களை மிரட்டும் ஐரோப்பிய நாடு
ரஷ்ய எரிவாயு விநியோகம் உக்ரைன் முடிவால் நிறுத்தப்பட்டதை அடுத்து உக்ரைன் அகதிகளுக்கான நிதி உதவியை ரத்து செய்ய இருப்பதாக ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ அச்சுறுத்தியுள்ளார்.
ராபர்ட் ஃபிகோ எச்சரிக்கை
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஸ்லோவாக்கியாவில் மட்டும் 130,000 உக்ரைன் அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான நிதி உதவியை ரத்து செய்வதாகவே ராபர்ட் ஃபிகோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ஊடாக பல தசாப்தங்களாக மத்திய ஐரோப்பாவிற்கு ரஷ்ய இயற்கை எரிவாயு வழங்கி வந்துள்ளது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக நீடிக்கும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், ரஷ்யா உடனான எரிவாயு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துள்ளது.
இதனால், ஜனவரி 1ம் திகதியுடன் ரஷ்ய எரிவாயு விநியோகம் தடைபட்டது. ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஸ்லோவாக்கியா முக்கிய நுழைவுப் புள்ளியாக இருந்தது. மட்டுமின்றி போக்குவரத்து கட்டணத்தில் மில்லியன் கணக்கான யூரோக்களை ஸ்லோவாக்கியா இழக்கிறது.
இந்த நிலையிலேயே, அகதிகளுக்கான நிதி உதவியை ரத்து செய்ய இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ராபர்ட் ஃபிகோ, உக்ரைனுக்கான மின்சார ஏற்றுமதியை நிறுத்தவும் முன்மொழிய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏற்கனவே மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதால், ஸ்லோவாக்கியாவே எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயம் இல்லை என்றார். ஆனால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முடிவால் ஆண்டுக்கு 500 மில்லியன் யூரோ தொகையை ஸ்லோவாக்கியா இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவீனப்படுத்தும் நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பில் தமது கட்சி வெளிப்படையான விவாதத்திற்கும் தயார் என ராபர்ட் ஃபிகோ தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த மாதமே, ரஷ்யாவுக்கு போருக்கான நிதி உதவிகளை ஸ்லோவாக்கியா முன்னெடுப்பதாகவும், உக்ரைனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ராபர்ட் ஃபிகோ அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனிடையே, உக்ரைனுக்கான மின்சார ஏற்றுமதியை ஸ்லோவாக்கியா முடக்கும் என்றால், உதவிக்கு நாங்கள் தயார் என போலந்து அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய எரிவாயு விநியோகத்தை உக்ரைன் முடக்கியது விளாடிமிர் புடினுக்கு எதிராக உக்ரைனுக்கு கிடைத்த இன்னொரு வெற்றி என்றும் போலந்து அரசாங்கம் பாராட்டியுள்ளது.
உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டாலும், கருங்கடல் வழியாக TurkStream திட்டத்தின் மூலம் ரஷ்யா இன்னும் ஹங்கேரி, துருக்கி மற்றும் செர்பியாவிற்கு எரிவாயு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |