இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்
இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தியதாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடத்தியது எப்படி?
Simranjit (Shally) Singh (41) என்னும் நபர், இந்தியர்களை கடத்திய விதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்களை கால்கரி, ரொரன்றோ மற்றும் மொன்றியலுக்கு விமானம் மூலம் வரவழைக்கும் சிங், பின்னர் அவர்களை ஒன்ராறியோவிலுள்ள கார்ன்வாலுக்கு கொண்டுசென்று, அங்கிருந்து படகு மூலம் St. Lawrence நதிவழியாக அமெரிக்காவுக்குள் அனுப்பிவந்துள்ளார்.
தான் 1,000க்கும் மேற்பட்டவர்களை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தியுள்ளதாக சிங் பெருமை பீற்றிக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CBC News
யார் இந்த சிங்?
கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள சிங், 2010ஆம் ஆண்டு மனைவி மற்றும் பிள்ளையுடன் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியுள்ளார். பின்னர் அவரது தாயும் சிங்குடைய மற்றொரு பிள்ளையும் கனடா வந்து அவர்களும் அகதி நிலை கோரியுள்ளனர். ஆனால், அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கனடா அதிகாரிகள் சிங்கை நாடுகடத்த முயன்றும், இந்திய தூதரகம் பயண ஆவணங்களை வழங்க மறுத்ததால், அவரை நாடுகடத்த முடியாமல்போயிருக்கிறது.
THE CANADIAN PRESS/Rob Gurdebeke
சிங் கனடாவில் ஒரு பெண்ணை இரண்டாவதாக மணந்துகொள்ள, அந்தப் பெண் சிங்கை ஸ்பான்ஸர் செய்ய, ஆனால், அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் முன் சிங் கைது செய்யப்பட்டுவிட்டார்.
டிசம்பர் மாதம் 28ஆம் திகதி சிங்குக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |