சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நடக்கும் அற்புதங்கள்!
சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.
சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது.
மற்ற ஊட்டச்சத்துக்களை போல ஃபோலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. இந்த போலிக் அமிலம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவாக பிறக்கும் நிலை உண்டாகிறது. கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.
கலோரி சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவுப் பொருளாக சோளம் இருக்கிறது. 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடகாத்திரமான எடையை பெற முடியும்.
சோளத்தை பச்சையாக சாப்பிடுவதாலும், சோளத்திலிருந்து பெறப்படும் சோள எண்ணெய்யை உணவு பயன்பாட்டிற்கு உபயோகிப்பதாலும் இதய நலம் காக்கபடுவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.