தென்கிழக்கு ஆசியா சோலார் பேனல்களுக்கு 3,521 சதவீத வரி விதித்த ட்ரம்ப் நிர்வாகம்
நான்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு 3,521 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க வர்த்தகத் துறை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் மானியங்கள்
ஒரு வருடத்திற்கு முன்பு பல பெரிய சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திடம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளைப் பாதுகாக்குமாறு கோரிக்கை வைத்த விவகாரத்தை அடுத்து தொடங்கிய விசாரணைக்குப் பிறகு இந்த வரி விதிப்பு வெளி வந்துள்ளது.
கம்போடியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் உள்ள நிறுவனங்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் மானியங்கள் பெற்றுக்கொண்டு நியாயமற்ற முறையில் மலிவான பொருட்களை அமெரிக்க சந்தையில் கொட்டுவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை.
புதிய வரிகள் குறித்து ஜூன் மாதத்தில் இறுதி முடிவை எடுக்க, ஒரு தனி அமெரிக்க அரசு நிறுவனமான சர்வதேச வர்த்தக ஆணையம் திட்டமிட்டுள்ளது. கம்போடியாவில் உள்ள சில சோலார் பேனல் ஏற்றுமதியாளர்கள் 3,521 சதவீத அதிகபட்ச வரிகளை எதிர்கொள்கின்றனர்.
மிகவும் குறைவாக 41 சதவீத வரியை சீன உற்பத்தியாளரான ஜிங்கோ சோலார் மலேசியாவில் தயாரித்த சோலார் பேனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சீன நிறுவனமான டிரினா சோலார், தாய்லாந்தில் தயாரிக்கும் பொருட்களுக்கு 375% வரிகளை எதிர்கொள்கிறது.
நான்கு நாடுகளிலிருந்து
சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முதல் பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து விதிக்கப்பட்ட வரிகளைத் தவிர்ப்பதற்காக பல சீன நிறுவனங்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு தங்கள் செயல்பாடுகளை மாற்றியுள்ளன.
2023 ல் மட்டும், அமெரிக்கா நான்கு நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள சோலார் பேனல்களை இறக்குமதி செய்ததாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிடப்பட்ட வரிகள் அமெரிக்க சோலார் பேனல் உற்பத்தியாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் இதுவரை 145 சதவீதம் வரை வரி விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |