முக்கிய விழாவின்போது ஜேர்மனி மக்களை நடுங்கவைத்த சம்பவம்... பொலிஸ் குவிப்பால் பரபரப்பு
ஜேர்மனியின் மேற்கே அமைந்துள்ள Solingen நகரில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய விழாவின் போது நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய தாக்குதல்தாரி
குறித்த தாக்குதலில் நால்வர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலில், தாக்குதலுக்கு கத்தியை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவயிடத்தில் தற்போது பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய தாக்குதல்தாரியை தேடும் வகையில் ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்படுகிறது.
தாக்குதல்தாரியின் அடையாளம் அல்லது நோக்கம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர். நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Karl Lauterbach தெரிவிக்கையில்,
காயமடைந்தவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும், பொலிசார் துரிதமாக செயல்பட்டு கோழைத்தனமான செயலை முன்னெடுத்த பரிதாபகரமான குற்றவாளியைப் பிடிப்பார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, சனிக்கிழமை அதிகாலையில் மாகாண முதல்வர் சம்பவயிடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்முகத்தன்மை திருவிழா
Solingen நகரின் 650வது ஆண்டு விழாவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் பன்முகத்தன்மை திருவிழா ஒன்றை சிறப்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வரையில் இந்த விழாவானது முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 10,000 மக்கள் விழாவில் கலந்துகொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று மர்ம நபர் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து அவசர மருத்துவ உதவி சேவைக்கு பலர் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Solingen நகரில் சுமார் 160,000 பேர்கள் குடியிருந்து வருகின்றனர். மட்டுமின்றி, ஜேர்மனியின் மிகப் பிரபலமான Cologne மற்றும் Düsseldorf நகரங்களுக்கு அருகே Solingen நகரம் அமைந்துள்ளது.
தற்போது கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதை அடுத்து, திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, இந்த தாக்குதல் சம்பவமானது நாட்டில் அதிகரித்துவரும் கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |