ஆசிய நாடொன்றின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தடை! அமுல்படுத்திய சோமாலியா
தைவான் குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை சோமாலியா தடை செய்துள்ளது.
சோமாலியா தடை
தைவான் தேசம் சீனாவால் உரிமை கோரப்பட்டு வருவதால், இரண்டு தேசங்களும் இடையில் சுமூக உறவு இல்லை.
இந்த நிலையில், அனைத்து தைவான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் போக்குவரத்து மற்றும் நுழைவு மீதான சோமாலியாவின் தடை அமுலுக்கு வந்துள்ளது என தைவானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா இந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த சோமாலியாவிற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தைவான் குற்றம்சாட்டியுள்ளது.
தைவான் அமைச்சகம்
இன்று அமுலுக்கு வந்த இந்த புதிய கொள்கை குறித்து, சோமாலியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த வாரம் தனக்குத் தெரிவித்ததாக தைவான் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், "சீனாவின் தூண்டுதலின் பேரில், தைவான் நாட்டினரின் பயண சுதந்திரம் மற்றும் பாதுகாப்பைக் கட்டுப்படுத்த சோமாலியா மேற்கொண்ட நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் கடுமையாக எதிர்த்துள்ளது. அத்துடன் சோமாலிய அரசாங்கம் உடனடியாக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது" எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 2758ஐ சோமாலியா மேற்கோள் காட்டியதாகவும், "ஒரே சீனா" கொள்கையை செயல்படுத்தியதாகவும் கூறியுள்ள அமைச்சகம், அந்நாடு தவறாக புரிந்துகொண்ட இதனை செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
சீனா எதிர்க்கிறது
சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதிதான் தைவான் என்ற தவறான எண்ணத்தை உருவாக்க சோமாலியா இதனை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம், இந்த முடிவு சோமாலியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றும், இதனை பாராட்டுவதாகவும் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியுள்ளார்.
மேலும் அவர் தைவனுக்கும், சோமாலியாவிற்கும் இடையிலான எந்தவொரு வகையான அதிகாரப்பூர்வ பரிமாற்றத்தையும் சீனா எதிர்க்கிறது என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |