உக்ரைனியர்களுக்கு தற்காலிக தங்கும் உரிமம்: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!
உக்ரைன் ரஷ்யா போருக்கு பிறகு சுமார் 30,000 உக்ரைனிய அகதிகள் இதுவரை பிரான்ஸ் நாட்டிற்கு வந்து இருப்பதாக அந்த நாட்டின் வீட்டுவசதி துறை அமைச்சர் இம்மானுவேல் வார்கன் கடந்த ஞாயிற்றுகிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 3.7 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸில் இதுவரை 30,000 அகதிகள் வந்து இருப்பதாகவும், அவர்களில் பாதி பேர் பிரான்ஸ் நாட்டு வழியாக பிற பகுதிகளுக்கு செல்வதாகவும் அந்த நாட்டின் வீட்டுவசதி துறை அமைச்சர் இம்மானுவேல் வார்கன் கடந்த ஞாயிற்றுகிழமை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரான்ஸ் நாட்டிற்குள் வரும் உக்ரைனிய அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கும் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு, அவர்கள் பிரான்ஸ் நாட்டில் கல்வியை தொடரவும், பணிபுரியவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக இம்மானுவேல் வார்கன் வானொலிக்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் இருந்து வெளியேறும் பொதுமக்களில் கிட்டத்தட்ட 1,00,000 நபர்கள் வரை பிரான்ஸ் வரவேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாகவே 40,000 உக்ரைனியர்கள் பிரான்ஸ் நாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.