சசிகலா அரசியலை விட்டு விலகவில்லை! அவர் அறிக்கையில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை கவனிச்சீங்களா? முழு விபரம்
சசிகலா அரசியலுக்கு வருவார், அவர் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை அதிமுகவுக்கு நிம்மதியை கொடுத்திருந்தாலும், அந்த அறிக்கையை நன்றாக படித்து பார்த்தால், அதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை பார்க்க முடிந்தது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலையாகினார்.
அவர் விடுதலை தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று அவர் அரசியிலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
சில ஊடகங்களில் சசிகலா அரசியலை விட்டு விலகுகிறார் என்று செய்தி வெளியாகின. ஆனால் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒதுங்குகிறேன் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான அம்மாவின் உணமைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்., என்று சசிகலா குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த அறிக்கையில் சசிகலா எங்குமே நான் அரசியலை விட்டு விலகுகிறேன், பொது வாழ்வை விட்டு விலகுகிறேன் என்று அறிவிக்கவில்லை. மிகவும் கவனமாக சசிகலா ஒதுங்குகிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, தேர்தல் நேரத்தில் அதிமுகவின் வாக்குகளை காலி செய்துவிட கூடாது என்பதால், அதிமுக தோற்றால் அதற்கு தான் காரணமாக இருந்துவிட கூடாது என்பதால் சசிகலா இப்படி கவனமாக, தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளாராம்.
தேர்தலுக்கு பின் மீண்டும் வந்துவிடுவேன் என்பது போன்று தான் சசிகலாவின் இந்த அறிக்கை உள்ளது.
சசிகலா இந்த அறிக்கையை சாதாரண ஏ4 வெள்ளை தாளில் வெளியிட்டுள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு அரசியல் தலைவர் தனது முக்கியமான அறிக்கையை இப்படி சாதாரணமாக வெளியிடுவது ஏன்? மொத்தமாக விலகுவதாக இருந்தால் இவ்வளவு சிம்பிளாக அறிவிப்பு வெளியாகுமா? என்றும் கேள்வியும் எழுந்துள்ளது.

