துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரலையில் வாசித்த பெண் நிருபர்..ஓடி வந்து கட்டியணைத்த மகன்..நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பெண் நிருபர் நேரலையில் வாசித்தபோது, அவரது மகன் ஓடி வந்து கட்டியணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர்
கொலோரடோவில் உள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகிகள் இருவரை மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த மாணவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் கைத்துப்பாக்கியை மீட்டனர்.
இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் அங்கு சம்பவத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெண் நிருபர் அலிசியா அகுனா செய்தியை வழங்கிக் கொண்டிருந்தபோது அவரது மகன் வேகமாக ஓடி வந்து தாயை கட்டியணைத்தார்.
பணியைத் தொடர்ந்த பெண் நிருபர்
பின்னர் அவரை அனுப்பிவிட்டு தனது பணியைத் தொடர்ந்த அலிசியா, 'மன்னிக்கவும், என் மகன் இப்போது தான் வந்தான். இந்த பதட்டம் குறைந்ததில் இருந்து நான் என் மகனைப் பார்க்கவில்லை' என அவர் கூறினார்.
அச்சமயம் அலிசியாவின் சக ஊழியர்கள், நீங்கள் தேவைப்பட்டால் தற்போது ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவரோ தன் மகன் நலமாக இருப்பதாக தெரிவித்து செய்தியை வழங்கினார்.
Fox news
இந்த தருணம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையில் காயமடைந்த ஊழியர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.