தவறு செய்துவிட்டோம் மன்னியுங்கள்: கண்ணீருடன் கெஞ்சும் ரஷ்ய வீரர்கள்
உக்ரைனை ஊடுருவியது பெரும் தவறு என்று கூறியுள்ள ரஷ்ய வீரர்கள், கண்ணீருடன் உக்ரைன் மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்கள்.
உக்ரைன் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த ஏழு ரஷ்ய வீரர்களை உக்ரைன் கைது செய்தது. அப்போது அவர்களுக்கு பேச ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.
அந்த வீரர்களில் ஒருவரான Galkin (34) என்பவர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது, தனது சக வீரர்கள் உக்ரைன் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதைக் குறித்து தான் கேள்விப்பட்டதாகவும், உக்ரைனை ஊடுருவியது பெரும் தவறு என்றும் குறிப்பிட்டார்.
புடின் தங்களிடம், உக்ரைனை சர்வாதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து மக்களை விடுவிப்பதற்காக உக்ரைனுக்குள் ஊடுருவி, தலைநகர் Kyivஐக் கைப்பற்றுமாறும் கூறி அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தன் சார்பிலும், தன் படைப்பிரிவு சார்பிலும் உக்ரைனிலுள்ள, ஒவ்வொரு குடும்பத்திடமும், ஒவ்வொரு குடிமகனிடமும், ஒவ்வொரு வயது முதிர்ந்தவர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடமும் உக்ரைனை ஊடுருவியதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார் அவர்.
அத்துடன், உக்ரைனுக்கு வீரர்களை அனுப்புவதை நிறுத்துமாறு புடினைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட அவர், தங்கள் இராணுவத் தலைவர்கள் கோழைத்தனமாக நடந்துகொண்டதாகவும், தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கைது செய்யப்பட்ட வீரர்கள் பலரும், தாங்கள் ஏமாற்றப்பட்டு உக்ரைனை ஊடுருவ அனுப்பப்பட்டதாக தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.