பாகிஸ்தானை உலகிற்கு காட்டியதே இம்ரான் கான்தான்: 14 கேப்டன்களுடன் சவுரவ் கங்குலியும் வலியுறுத்தல்
சிறையில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என 14 கேப்டன்களுடன் சவுரவ் கங்குலியும் வலியுறுத்தியுள்ளார்.
இம்ரான் கானின் உடல் நலம்
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் அவருக்கு வலது கண்ணில் பார்வை 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் தரப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவரான கிரேக் சேப்பலின் முன்னெடுப்பில், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட 14 முன்னாள் அணித்தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையை, பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு அனுப்பினர்.

சவுரவ் கங்குலி வலியுறுத்தல்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் (Sourav Ganguly) ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர், "முன்னாள் கேப்டன்கள் செய்தது மிகச்சரியான செயல். இம்ரான் கானின் உடல்நலம் விரைவில் சரியாக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
முதலில் ஒரு அணித்தலைவராகவும், அதன்பின் ஒரு பிரதமராகவும் பாகிஸ்தான் நாட்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அப்படிப்பட்ட ஒருவரை பாதுகாப்பது அந்நாட்டின் கடமை. பாகிஸ்தான் அரசு செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணத்தை தனது தலைமையில் பெற்றுத் தந்தவர் இம்ரான் கான் (Imran Khan) என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |