300 உயிர்களை பலிகொண்ட வரலாறு காணாத கனமழை..!
தென் ஆப்பிரிக்காவில் வரலாறு காணாத கனமழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.
டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் உண்டான வெள்ளத்தினால் சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள ஆப்பிரிக்காவின் பரபரப்பான துறைமுகம் ஒன்றில் கனமழையால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் கப்பல் போக்குவரத்து தடைபட்டது. இந்த கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலியானோரின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோசா, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சில பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் மற்றும் குப்பை அகற்றுதல் போன்ற நகராட்சி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம் காரணமாக இந்த இயற்கை பேரிடர் நடந்துள்ளது. இதனை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை இனிமேலும் தள்ளிப் போட கூடாது' என தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைவதால் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையானது அடுத்த சில ஆண்டுகளில், இதுபோன்ற வானிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.