பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியது! தென்கொரிய கூட்டுப்படை பரபரப்பு குற்றச்சாட்டு
வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை தங்கள் ராணுவம் கண்டறிந்ததாக தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர் கூறியுள்ளார்.
கூட்டுப் பயிற்சி
தென்கொரியாவும், அமெரிக்காவும் சுதந்திர கேடயம் என அழைக்கப்படும் 11 நாட்கள் கூட்டுப் பயிற்சியின் நடுவில் உள்ளன. வடகொரியாவின் இராணுவ மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன.
ஆனால், இத்தகைய பயிற்சிகள் தங்கள் நாட்டிற்கு எதிரான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே, பதிலுக்கு அதிகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலமுறை வடகொரியா எச்சரிக்கை செய்திருந்தது.
@Handout / South Korean Defence Ministry/AFP
பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
இந்த நிலையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ள தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர் கூறுகையில்,
'எங்கள் இராணுவம் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை வடக்கு பியோங்கன் மாகாணத்தில் உள்ள டோங்சாங்-ரி பகுதியில் இருந்து காலை 11.05 மணிக்கு, கிழக்குக் கடலை நோக்கி செலுத்தியதாக கண்டறிந்துள்ளது.இது ஐ.நா தடைகளை மீறிய ஒரு தீவிர ஆத்திரமூட்டல்' என தெரிவித்துள்ளார்.
@Anthony WALLACE / AFP
இதேபோல் ஜப்பானும் இந்த ஏவுதலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.