இலங்கையிலிருந்து பெண்களை இறக்குமதி செய்யவேண்டும் என கூறிய தென்கொரிய மேயரால் சர்ச்சை
உலக நாடுகள் பலவற்றில் பிறப்பு விகிதம் குறைந்துவரும் விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை இறக்குமதி செய்யலாம் என தென்கொரிய மேயர் ஒருவர் ஆலோசனை கூற, அதனால் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
தென்கொரிய மேயரால் சர்ச்சை
தென்கொரியாவின் South Jeolla மாகாணத்திலுள்ள Jindo என்னுமிடத்தின் மேயராக இருப்பவர் கிம் ஹீ சூ (Kim Hee-soo).

பல நாடுகளைப் போல, தென்கொரியாவிலும் பிறப்பு வீதம் கணிசமாக குறைந்துவருகிறது.
இந்நிலையில், தென்கொரியாவின் கிராமப்புறங்களில் பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து பெண்களைக் கொண்டுவருவது உதவும் என்று கூறியுள்ளார் கிம்.
கிம்முடைய கருத்துக்கு உடனடியாக கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
பலரும் கிம் பயன்படுத்திய வார்த்தைகள் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் என்று விமர்சித்துள்ளதுடன், அவர் பெண்களை பிரச்சினையை தீர்க்க உதவும் ஒரு தீர்வாக குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவும் கடிந்துகொண்டுள்ளனர்.
தென்கொரியாவின் பிறப்பு வீதம் குறையக் காரணம் பெண்கள் குறைவாக உள்ளதைக் குறித்தது அல்ல, அது இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் தொடர்பிலானது என்கிறார்கள் விமர்சகர்கள்.

சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள கிம், தான் சொல்ல வந்தது, பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான திருமணம் ஆகிய விடயங்களுக்கு ஆதரவளிப்பதைக் குறித்தது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்க்க தங்கள் பொருளாதாரம் போதுமானது அல்ல என இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள்.
ஆக, தென்கொரியாவின் கிராமப்புறங்களில் மக்கள்தொகை குறைந்துவருவதைத் தவிர்க்க, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள ஊக்குவிக்கும் வழக்கம் உண்மையாகவே உள்ளது.
அப்படி வேறு நாடுகளிலிருந்து வந்து தென்கொரியர்களை திருமணம் செய்துகொள்வோரில் பலர் மொழிப்பிரச்சினை, தனிமை, பார்பட்சமாக நடத்தப்படுதல் என்னும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறார்கள்.
அத்துடன், மக்கள் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விவாதத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். விவாதம், பிறப்பு வீதத்தை மட்டும் குறித்தது அல்ல, சமத்துவம், மரியாதை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு உண்மையாகவே தேவையான விடயங்கள் குறித்து ஏற்கனவே மக்களிடையே விவாதங்கள் நடந்துவருகின்றன.
ஆகவேதான் கிம் வேறு நாடுகளிலிருந்து பெண்களைக் கொண்டுவரவேண்டும் என்று கூறிய விடயம் மக்கள் மனதை காயப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |