விண்வெளிச் சுற்றுலாவுக்கு சென்ற நான்கு பேர்.. வரலாறு சாதனை படைத்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X நிறுவனம், முதல்முறையாக நான்கு அமெரிக்கர்களை விண்வெளிக்கு சுற்றுலாவுக்காக அனுப்பியுள்ளது.
38 வயதான கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், 29 வயதான ஹேலி ஆர்செனெக்ஸ், 51 வயதான சியான் புரோக்டர் மற்றும் 42 வயதான லாக்ஹீட் மார்ட்டின் ஆகியோர் முதல் முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட் 4 சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதல்கட்டமாக வெற்றிகரமாக முடிந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்-X 12 நிமிடங்களில் அதன் 2 ஆவது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.
இந்த விண்கலத்துக்கு இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 575கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரவுள்ளது.
3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்வெளிச் சுற்றுலாவுக்காக தேர்தெடுக்கப்பட்ட 4 பேரும் 9 மாதங்கள் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும் புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.