ஸ்பெயினில் "கோல்டன் விசா" திட்டம் ரத்து: வீட்டுவசதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி?
வீட்டுவசதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோல்டன் விசா திட்டத்தை ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
கோல்டன் விசா திட்டம் ரத்து
ஸ்பெயின் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை சாராதவர்களுக்கு சொத்து முதலீட்டின் பேரில் குடியுரிமை வழங்கும் "கோல்டன் விசா" திட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் வீட்டுவசதி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
மேலும் 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 6 லட்சம் வீடுகள் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.
ஏப்ரல் 2024ம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், "வீட்டுவசதி என்பது ஒரு அடிப்படை உரிமை, அதை வைத்து ஊக வணிகம் செய்ய முடியாது" என்று திட்டவட்டமாக கூறி இந்த திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த "கோல்டன் விசா" திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான ஒரு வருடம் கழித்து, அதாவது ஏப்ரல் 2 ஆம் திகதியுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதை ஸ்பெயின் முழுமையாக நிறுத்தியுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 15,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சீனா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (UK), அமெரிக்கா (USA), உக்ரைன், ஈரான், வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிக பயனாளிகளாக இருந்துள்ளனர்.
உள்நாட்டு வாடகை வீடு விலை உயர்வுக்கான காரணம்
முன்னதாக நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள தனிநபர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர் ஸ்பெயினில் குறைந்தபட்சம் €500,000 மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் குடியிருப்பு அனுமதியும், காலப்போக்கில் ஸ்பெயின் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்றனர்.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் முக்கிய குறைபாடு என்னவென்றால், விசா பெற்றவர்கள் ஸ்பெயினில் வசிக்கவோ, வேலை செய்யவோ அல்லது கல்வி கற்கவோ கட்டாயப்படுத்தப்படவில்லை.
இதனால் பலர் தாங்கள் வாங்கிய சொத்துக்களை தங்களது சொந்த விடுமுறை இல்லங்களாகவோ அல்லது அதிக லாபம் தரும் சுற்றுலா வாடகைக்காகவோ (Airbnb போன்ற தளங்கள் மூலம்) பயன்படுத்தினர்.
இது உள்நாட்டு வாடகை வீடு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்திய போது, ஸ்பெயினும் 2013 இல் இந்த "கோல்டன் விசா" திட்டத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |