உலக நாடுகள் புலம்பெயர்தலை எதிர்க்கும் நிலையில் நாடொன்று வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி
அமெரிக்கா முதலான உலக நாடுகள் பல புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில், ஒரு நாடு, புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
நாடொன்று எடுத்துள்ள நல்ல நடவடிக்கை
ஆம், ஸ்பெயின் அரசு, அந்நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்படி வாழ வழிமுறை ஒன்றை வகுத்துள்ளது.

ஸ்பெயின் அரசு நிறைவேற்றியுள்ள அந்த அரசாணையின்படி, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன் ஸ்பெயின் நாட்டுக்கு வந்த புலம்பெயர்ந்தோர், சில நிபந்தனைகளின் கீழ், ஓராண்டு குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பதும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக இருக்கக்கூடாது என்பதும் சில முக்கியமான நிபந்தனைகள் ஆகும்.
இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால், ஒரு ஆண்டு குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள், அதை மேலும் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது.
பல்லாயிரக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து பேசிய ஸ்பெயின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Elma Saiz Delgado, விவசாயம், சுற்றுலா மற்றும் முதியோர், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் துறைகளுக்கு பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கையால் ஆவணங்களற்ற பணியாளர்கள் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழவும் வழி கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் அது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் சுமார் ஒரு மில்லியன் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |