ஸ்பெயினில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
Spain Heavy Rain and Flood Leaving 4 dead: ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினின் கிழக்கு மத்தியதரைக் கடல் கடலோரப் பகுதிகளை பலத்த புயல் தாக்கியது. இதனால் கிழக்கு ஸ்பெயின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கில் இதுவரை குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
புயல் மற்றும் கனமழையில் வெலன்சியா மற்றும் அலிகாண்டே ஆகிய பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்
கனமழை காரணமாக வெள்ள நீர் வேகமாக உயர்ந்து வருவதால் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்த 450க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்திற்கு மத்தியில் வீட்டின் கூரைகள், மூழ்கிய வாகனங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.