ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து: பதவி விலக அமைச்சர் மறுப்பு
Spain transport minister defies resignation after train crash: ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்ய போக்குவரத்து அமைச்சர் மறுத்துள்ளார்.
ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து
கடந்த புதன்கிழமை காலை டோலிடோ மாகாணத்தின் உர்தா பகுதிக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' (Renfe) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரயிலும், தனியார் ரயில் நிறுவனமான 'ஐரியோ' (Iryo)-விற்குச் சொந்தமான மற்றொரு ரயிலும் மோதிக் கொண்டு பெரும் விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களும் ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில் இருந்து தெற்குப் பகுதியான அண்டலூசியா நோக்கிச் செல்லும் பாதையில் ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் முன்னே சென்று நின்ற ஐரியோ ரயிலின் மீது அரசுக்கு சொந்தமான ரென்ஃபே நிறுவனத்தின் அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 96 பேர் வரை உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், விபத்தின் போது ரென்ஃபே ரயில் மணிக்கு சுமார் 160 கி.மீ முதல் 200 கி.மீ வேகம் வரை பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக இந்த விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பதவி விலக அமைச்சர் மறுப்பு
இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்ய கோரும் கோரிக்கையை ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் புவென்டே திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

மாட்ரிட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆஸ்கர் புவென்டே, தன்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்துக்கான காரணத்தை கண்டறிய அரசு தீவிரமாக விசாரணை செய்து வருவதாக உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்கர் புவென்டே, நான் பதவியில் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து பேசிவது என்னுடைய கடமை இல்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திப்பது மட்டுமே என்னுடைய முதன்மையான பணி என்று தெரிவித்துள்ளார்.