ஐரோப்பிய நாடொன்றின் புதிய விதி... மொத்தமாக நாட்டைப் புறக்கணிக்க எழுந்த கோரிக்கை
ஸ்பெயின் நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பயணியும் தங்களின் மொத்த தகவலையும் அதிகாரிகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
கடுமையான விவாதம்
அதில், ஒவ்வொரு பயணியும் அவர்கள் தங்கப் போகும் ஹொட்டல்கள், வாடகைக்கு எடுக்கும் கார் மற்றும் பல தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த புதிய விதிகள் டிசம்பர் 2-ம் திகதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகப் பக்கங்களில் கடுமையான விவாதம் எழுந்துள்ளது.
குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிரித்தானிய மக்கள் விடுமுறைக்கு செல்லும் மிகவும் பிரபலமான இடமாகும்.
ஆனால் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து தங்களது குடிமக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் இதுவென ஸ்பெயின் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
ஸ்பானிஷ் ஹொட்டல்கள் தற்போது வாடிக்கையாளர்களிடம் அவர்களின் அடையாள அட்டைகள் அல்லது கடவுச்சீட்டு விவரங்களை மட்டுமே கேட்கின்றனர். ஆனால் புதிய விதிகளின்படி சுற்றுலாப்பயணிகளிடம் 31 தரவு வரை சேகரிக்க வேண்டும்.
புதிய விதியில் இருந்து விலக்கு
புதிய விதி தொடர்பில் விளக்கமளித்துள்ள அரசாங்கம், வெளிநாட்டு மக்களும் ஸ்பெயின் நாட்டில் பயங்கரவாத செயல்களிலும் குற்ற நடவடிக்கைகளிலும் சர்வசாதாரணமாக ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே, புதிய விதியை அமுலுக்குக் கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 2ம் திகதி முதல் ஒவ்வொரு சுற்றுலாப்பயணியும் முழு பெயர், பாலினம், நாடு, கடவுச்சீட்டு இலக்கம், பிறந்த திகதி, வீட்டு முகவரி, தொலைபேசி மற்றும் அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின் அஞ்சல் என அடிப்படைத் தகவல் அனைத்தும் வழங்க வேண்டும்.
மேலும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடன் பயணம் செய்யும் பெரியவர்கள் சிறார்களுடனான அவர்களின் உறவை விளக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து போதுமான தரவுகளை சேகரிக்கத் தவறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |