இனி இது கட்டாயமில்லை...! பிரபல ஐரோப்பிய நாட்டில் முடிவுக்கு வரும் முக்கிய விதி
பிரபல ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், பொதுவெளியில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில், பொதுவெளியில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை நடைபெறும் வாராந்திர கூட்டத்தில் கட்டாயமாக வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சர் Carolina Darias தெரிவித்துள்ளார்.
எனினும், பொது போக்குவரத்து உட்பட உட்புற பொது இடங்களிலும், குடிமக்கள் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத போதெல்லாம் வெளிப்புறங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும்.
ஸ்பெயினில் தொற்று விகிதங்கள் பல நாட்களாக குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில், ஸ்பெயினில் கொரோனா தொற்று விகிதம் சீராக குறைந்துள்ளது, வியாழன் அன்று 1,00,000 பேருக்கு 2,421 தொற்றுகளை எட்டியுள்ளது, இது ஜனவரி தொடக்கத்தில் கிட்டத்தட்ட 3,400 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.