கலப்பட மது அருந்தியவர்களில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு! இன்னும் அதிகரிக்கலாம் என அச்சம்
இந்திய மாநிலம் குஜராத்தில் கலப்பட மது அருந்தியவர்களில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் விற்கப்பட்ட கலப்பட மதுவை வாங்கி அருந்திய பலர் மயங்கி விழுந்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் பொடாட் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகவும், கலப்பட மது விற்றதாக இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்.
PC: PTI Photo
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேலும் 50 பேர் வரை சிகிச்சை பெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.