இலங்கை சதுரங்க சம்மேளனம் - வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்வு!
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் கீழ் நடத்தப்பட்ட தேசிய ஆரம்பநிலை அல்லது புதியவர் பிரிவு (Novice Division) சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் அடுத்து சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட போட்டி ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கடந்த எட்டு மற்றும் ஒன்பதாம் திகதிகளில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் 85 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
திறந்த பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், திறந்த பிரிவில் 58 பேரும் மகளிர் பிரிவில் 27 பேரும் பங்கேற்றனர்.
முல்லைத்தீவு நகரப் பகுதி, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு விஸ்வமடு, மல்லாவி, மாங்குளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வீர வீராங்கனைகள் இந்த சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 25 வீர வீராங்கனைகள் வட மாகாண மட்டத்தில் நடைபெறவுளள மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
திறந்த பிரிவில் 14 வீர வீராங்கனைகளும் மகளிர் பிரிவில் 11 வீராங்கனைகளும் மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கு முல்லைத்திவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பரிசில்களை வழங்கிவைத்தார்.
முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களும் ஏனைய வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.