இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளிநபர் ஊடுருவல்: பொலிஸார் விசாரணை
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வெளிநபர்களால் ஊடுருவப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.
பொலிஸார் அவசர நடவடிக்கை
அதில் அதிகாரப்பூர்வ இணையதளம் பல சந்தர்ப்பங்களில் வெளியாட்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று இருப்பதாக கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய இலங்கை நாட்டின் கணினி அவசர தயார்நிலை பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அரச இலச்சினை தெளிவற்ற தன்மையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக்கு பிறகு அத்துறையின் செயலாளர் கடந்த 09ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் ஒன்றை செய்துள்ளார்.
விசாரணை தீவிரம்
இந்த புகாரை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் மட்டத்திலும் உள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |