வீட்டிலிருந்து வேலை பாருங்க! பொதுமக்களுக்கு எரிபொருள் இல்லை... உச்ச திணறலில் இலங்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ள நிலையில் எரிபொருளை சேமிக்க மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் பொருளாதார நெருக்கடி தீர்ந்தபாடில்லை.
9,000 டன் டீசல் மற்றும் 6,000 டன் பெட்ரோல் கையிருப்பில் உள்ளது என நாட்டின் அமைச்சர் காஞ்சன விஜசேகர சமீபத்தில் அறிவித்தார். எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் திகதி வரை பொதுமக்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை முறையாக விநியோகிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதற்கான பொது போக்குவரத்து சேவைகளை, அரச பேருந்துகளை பயன்படுத்தி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத் தலைநகரான கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதி உச்ச தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், நாட்டில் கையிருப்பில் காணப்படும் எரிபொருளின் அளவு மிக குறைவாகவே காணப்படுகிறது.