வெள்ளத்தில் சேதமடைந்த அரிசிகள் சட்டவிரோதமாக விற்பனை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வெள்ளத்தில் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த அரிசி
இலங்கையை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த அரிசி வகைகள் சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சேதமடைந்த அரிசிகள் மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ பகுதியில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வெளியான எச்சரிக்கை
இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசி பறிமுதல் செய்ததாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் இது போன்ற சட்ட விரோதமான செயல்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், எனவே யாரும் இது போன்ற முறைகேடான செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பொதுமக்கள் அரிசி வாங்கும் போது, விழிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க சுகாதார அமைச்சகத்தின் பேரிடர் முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர துரித இலக்கமான 1926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |