இலங்கையில் கனமழை: வெள்ளத்தால்15 பேர் உயிரிழப்பு., 19,000 பேர் பாதிப்பு
பருவமழையின் தாக்கம் காரணமாக இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இலங்கையில் சுமார் 300 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மழை காரணமாக சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த மழையினால் 4000க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளம் காரணமாக 5,000 குடும்பங்களைச் சேர்ந்த 19,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
களத்தில் இறங்கிய இலங்கை ராணுவம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுபுறம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை மூன்று ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநில அரசு உஷார்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |