இலங்கையின் அழகும் அதிசயமும் நிறைந்த சுற்றுலா தளங்கள்
நமது இலங்கை நாடானது, சுற்றுலாத் துறைக்கு மிகவும் பிரசித்தமானது. இயற்கையான இடங்கள், மரங்கள் செடிகள், கொடிகள், தேயிலை என வெளிநாட்டவர்களை கவர்ந்த ஒரு இடமாக நமது நாடு காணப்படுகின்றது.
சிறிய நாடு என்றபோதிலும் இதில் எண்ணிலடங்காத பல அழகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அழகு என்று கூறுவதையும் விடுத்து நிறைய புராதன விடயங்கள் பொக்கிஷங்களாக காணப்படுகின்றன.
ஒவ்வொரு விடயத்துக்கு பின்னாலும் ஒவ்வொரு கதை உண்டு. சரி இனி இலங்கையின் மிகவும் பிரசித்தமான இடங்களைப் பற்றி பார்ப்போம்.
சிகிரியா
இது இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் ஒரு சின்னம். இது 06ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள காசியப்ப மன்னனால் அமைக்கப்பட்டது.
இந்த குகைக்குள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக நிறைய பெண்களின் உருவப் படங்கள் காணப்படுகின்றன.
இதனைக் காண்பதற்கு இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் சரி வெளிநாட்டவர்களும் சரி மிகுந்த ஆர்வத்துடன் வருவதை கண்ணோக்க முடியும்.
சிங்கராஜ வனம்
இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு வனமாகும். இது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகக் காணப்படுகிறது.
இந்த வனத்தில் ஆண்டுக்கு சராசரியாக 23.6 செல்சியஸ் ஆகும். வருடத்துக்கு சராசரியாக 2500 மில்லிமீட்டர் மழை இங்கு பொழிகின்றது.
image - attractions srilanka
பின்னவெல யானைகள் சரணாலயம்
1975ஆம் ஆண்டில் இந்த யானைகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது. யானைகளைக் கண்டாலே பயப்படுவோர் இந்த சரணாலயத்துக்கு வந்தால், யானைகள் குளிப்பதையும் விளையாடுவதையும், யானைகள் உணவு உண்பதையும் கண்டுகளிக்கலாம்.
தாய் யானைகளால் கைவிடப்பட்ட குட்டி யானைகளுக்கு உணவளிப்பதற்காகவும் அவற்றுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்துவதற்காகவும் இது அமைக்கப்பட்டது. காலப்போக்கில் சுற்றுலாத் தளமாகவும் மாற்றம் பெற்றது. இங்கு அனேக சுற்றுலாப் பயணிகள் வருவதையும் காணலாம்.
image - mr & mrs smith
யால தேசியப் பூங்கா
இந்த தேசியப் பூங்காவில் ஐந்து பிரிவுகள் காணப்படுகின்றன. ஆனால், இரண்டு பிரிவுகள் மாத்திரமே மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இந்தக் காடானது மொத்தமாக 979 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இந்தக் காடு இங்கு வசிக்கும் ஏராளமான வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றதாகும்.
இலங்கையின் முக்கியமான பறவைகள் வாழிடங்கள் எழுபதில் இதுவும் ஒன்று. அதுமட்டுமில்லாமல் உலகில் சிறுத்தைகள் செறிவுமிக்க இடங்களுள் யால தேசிய வனமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இங்கும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளைக் காணலாம்.
image - wikipedia
உலக முடிவு நுவரெலியா
நுவரெலியா ஹோர்டன் பிளேன்ஸின் முடிவுடன் ஆரம்பமாகுவதே உலக முடிவு ஆகும். இது சுமார் 4000 அடி உயரம் கொண்டது. பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் ஓரிடமாக இது விளங்குகின்றது.
மலையின் உச்சியிலிருந்து கீழே பார்க்கும்பொழுது வெறும் அதலபாதாளமாக மட்டுமே நமது கண்களுக்கு புலப்படுகிறது. இதனாலேயே இதை உலக முடிவு என்று கூறப்படுகிறது.
பாசிக்குடா
இலங்கையின் மிக அழகான கடற்கரைகளுள் ஒன்று பாசிக்குடா, மட்டக்களப்பில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது.
ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற்தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் என இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது பாசிக்குடா கடற்கரை.
கிடுகுகளால் அழகுற, நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும் இக்கடற்கரையின் சிறப்பம்சமாகும்.
அறுகம் குடா
கொழும்பிலிருந்து 317 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள அறுகம் குடா ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இங்கு அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
ஏப்ரல் முதல் அக்டோர் மாதம் வரையிலான காலகட்டம் அலைச்சறுக்கு விளையாட ஏற்றதாக உள்ளது.
பேராதனை பூங்கா
இலங்கையின் மிகப்பெரிய தாவரவியற் பூங்காவான பேராதனை பூங்கா, அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்கிறது.
இங்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓக்கிட் பூங்கா புகழ் பெற்றது.
வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாழையகம், அந்தூரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் பூங்காவிலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து செல்லும் தொங்கு பாலமும் இந்தப் பூங்காவின் சிறப்பம்சமாகும்.
பூங்காவின் அனேகமான ஓரத்தை ஒட்டிச் செல்லும் மகாவலி ஆற்றின் கரையில், பூங்காவின் எல்லைபோல் மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு குளமும் பூங்காவில் அமைந்துள்ளது.
நக்கிள்ஸ் மலைத்தொடர்
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட நக்கிள்ஸ் மலைத்தொடர், மலையேற்றத்தை விரும்புவோருக்கு சொர்க்கமாகும்.
இது தெற்கிலும் கிழக்கிலும் மகாவலிப் பள்ளத்தாக்கினாலும் மேற்கில் மாத்தளைப் பள்ளத்தாக்கினாலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலிருந்து பிரிக்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்திலிருந்து இதனைப் பார்க்கும் போது இது வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆங்காங்கே இருப்பதனால் கையை இறுகப் பொத்தியது போன்று தோற்றமளிப்பதாகும், எனவே தான் நக்கிள்ஸ் என பெயர்பெற்றது.