இந்தியா-இலங்கை மோதல்: சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் (R. Premadasa Stadium) தொடங்கியது.
இதில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாத்தும் நிஸ்ஸங்க (Pathum Nissanka) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார்.
இருப்பினும் மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான வேகத்தில் சரியத் தொடங்கின. துனித் வெல்லலகே (Dunith Wellalage) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்துகளில் 67 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் குவித்தது.
சமனில் முடிந்த போட்டி
இதையடுத்து இரண்டாவது துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 47 பந்துகளில் 58 ஓட்டங்கள் அதிரடியாக குவித்து அசத்தினார்.
நட்சத்திர வீரரான விராட் கோலி 32 பந்துகளில் 24 ஓட்டங்கள் குவித்து இருந்த போது ஹசரங்கா பந்துவீச்சில் lbw-வில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய கே.எல் ராகுல் 31 ஓட்டங்களும், அக்சர் படேல் 33 ஓட்டங்களையும், சிவம் துபே 25 ஓட்டங்களையும் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஓட்டங்கள் சீரான வேகத்தில் வந்தாலும், விக்கெட்டுகள் மறுமுனையில் சரிந்து கொண்டே வந்தன.
47 வது ஓவரின் 5 பந்தில் அசலங்கா வீசிய பந்தில் அர்ஷ்தீப் சிங் Lbw முறையில் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறியதை தொடர்ந்து இந்திய அணி 230 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |