மெண்டீஸ், ஷனகா அதிரடி...சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி
15வது ஆசிய கிண்ணம் டி20 கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றிபெற்றது.
துபாயில் இன்று நடைபெற்ற 5வது ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
மெகிடி ஹசன் 38 ஓட்டங்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ஓட்டங்கள் சேர்த்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி சார்பில் நிசாங்கா மற்றும் குசால் மெண்டீஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியில் நிசாங்கா 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய அசலங்கா 1 ரன்னும், குணதிலகா 11 ரன்னும், ராஜபக்சா 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து மெண்டீசுடன், கேப்டன் தசுன் ஷனகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.
இதனிடையே சிறப்பாக ஆடி வந்த மெண்டீஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் 60 (37) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹசரங்கா 2 ஓட்டங்களும், அதிரயாக ஆடி வந்த கேப்டன் ஷனகா 45 (33) ஓட்டங்களும் அவரைத்தொடர்ந்து கருணரத்னே 16 (10) ஓட்டங்களும் எடுத்து வெளியேறினார்.
கடைசி ஒவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டநிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த ஒவரில் சிறப்பாக ஆடிய பெர்ணாண்டோ பவுண்டரி விளாசி வெற்றியை உறுதிசெய்தார். இறுதியில் பெர்ணாண்டோ 10 (3) ஓட்டங்களும், தீக்சனா ரன் ஏதும் எடுக்காமலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் இலங்கை அணி 19.2 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்தது. வங்காள தேச அணி சார்பில் அதிகபட்சமாக எபாடட் ஹுசைன் 3 விக்கெட்டுகளும், டஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளும், முஸ்டபிசூர் ரஹ்மான் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெற்றது.